Saturday, June 15, 2019

2. மகாபாரதமும் எண் 18-உம்

மகாபாரதத்துக்கு ஜய என்று ஒரு பெயர் உண்டு. சம்ஸ்க்ருதத்தில் ஜய என்ற சொல்லுக்கு வெற்றி என்று பொருள். ஜய என்ற சம்ஸ்க்ருத எழுத்துக்கள் 18 என்ற எண்ணையும் குறிக்கும்.


மகாபாரதத்தின் பெயரிலேயே 18 என்ற எண் இருப்பதாலோ என்னவோ, மகாபாரதத்தில் எண் 18 அதிகம் இடம் பெறுகிறது.

மகாபாரதத்தில் 18 பர்வங்கள் (பாகங்கள்) உள்ளன.
மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.
பாண்டவர்களின் 7 அக்ஷௌஹிணி சேனைகளும், கௌரவர்களின் 11 அக்ஷௌஹிணி சேனைகளுமாக மொத்தம் 18 அக்ஷௌஹிணி சேனைகள் போரில் பங்கேற்றன.

1 தேர், 1யானை, 3 குதிரைகள், 5 காலாட்கள் சேர்ந்தது ஒரு பதி. 3 பதிக்கள் சேர்ந்தது ஒரு சேனாமுகம். 3 சேனாமுகங்கள் சேர்ந்தது ஒரு குல்மம். 3 குல்மங்கள் சேர்ந்தது ஒரு குணம். 3 குணங்கள் சேர்ந்தது ஒரு வாஹினி. 3 வாஹினிகள் சேர்ந்தது ஒரு ப்ருதனை. 3 ப்ருதனைக்கள் சேர்ந்தது ஒரு சமூ. மூன்று சமூக்கள் சேர்ந்த்து ஒரு அனீகினீ. 10 அனீகினீக்கள் சேர்ந்தது ஒரு அக்ஷௌஹிணி.

கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒரு அக்ஷௌஹிணியில், 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும்109,350 காலாட்படையினர் இருந்தனர் என்று அறியலாம்.

அப்படியானால் 18 அக்ஷௌஹிணியில், 393,660 தேர்கள், 393,660 யானைகள், 1,180,980 குதிரைகள் மற்றும் 1,968,300 காலாட்படையினர் இருந்திருப்பார்கள். (இந்த எல்லா எண்களின் இலக்கங்களின் கூட்டுத் தொகை 18இன் கூட்டுத் தொகையான 9தான்!) 

யானை, குதிரை, தேர் மீது அமர்ந்து போரிட்ட வீரர்களைக்  கணக்கிட்டால், போரில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 39,36,600 (சுமார் 40 லட்சம்) வரும்.

பாண்டவர் பக்கத்தில் உயிர் பிழைத்த ஒரு சிலரைத் தவிர, மற்றவர் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர் என்பது ஒரு வருத்தமளிக்கும் உண்மை.

மகாபாரதத்தில் சுமார் 18 லட்சம் சொற்கள் உள்ளன. 

நல்லவேளை! இந்தக் கட்டுரையில் 18 பாராக்கள் இல்லை. 10 பாராக்கள்தான் உள்ளன. ஏதோ இந்த மட்டும் வாசகர்கள் பிழைத்தார்கள்!

அடுத்த பதிவு:
முந்தைய பதிவு: அறிமுகம்

No comments:

Post a Comment

2. மகாபாரதமும் எண் 18-உம்

மகாபாரதத்துக்கு ஜய என்று ஒரு பெயர் உண்டு. சம்ஸ்க்ருதத்தில் ஜய என்ற சொல்லுக்கு வெற்றி என்று பொருள். ஜய என்ற சம்ஸ்க்ருத எழுத்துக்கள் 18 என்ற ...