Saturday, June 15, 2019

2. மகாபாரதமும் எண் 18-உம்

மகாபாரதத்துக்கு ஜய என்று ஒரு பெயர் உண்டு. சம்ஸ்க்ருதத்தில் ஜய என்ற சொல்லுக்கு வெற்றி என்று பொருள். ஜய என்ற சம்ஸ்க்ருத எழுத்துக்கள் 18 என்ற எண்ணையும் குறிக்கும்.


மகாபாரதத்தின் பெயரிலேயே 18 என்ற எண் இருப்பதாலோ என்னவோ, மகாபாரதத்தில் எண் 18 அதிகம் இடம் பெறுகிறது.

மகாபாரதத்தில் 18 பர்வங்கள் (பாகங்கள்) உள்ளன.
மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது.
பாண்டவர்களின் 7 அக்ஷௌஹிணி சேனைகளும், கௌரவர்களின் 11 அக்ஷௌஹிணி சேனைகளுமாக மொத்தம் 18 அக்ஷௌஹிணி சேனைகள் போரில் பங்கேற்றன.

1 தேர், 1யானை, 3 குதிரைகள், 5 காலாட்கள் சேர்ந்தது ஒரு பதி. 3 பதிக்கள் சேர்ந்தது ஒரு சேனாமுகம். 3 சேனாமுகங்கள் சேர்ந்தது ஒரு குல்மம். 3 குல்மங்கள் சேர்ந்தது ஒரு குணம். 3 குணங்கள் சேர்ந்தது ஒரு வாஹினி. 3 வாஹினிகள் சேர்ந்தது ஒரு ப்ருதனை. 3 ப்ருதனைக்கள் சேர்ந்தது ஒரு சமூ. மூன்று சமூக்கள் சேர்ந்த்து ஒரு அனீகினீ. 10 அனீகினீக்கள் சேர்ந்தது ஒரு அக்ஷௌஹிணி.

கணக்குப் போட்டுப் பார்த்தால் ஒரு அக்ஷௌஹிணியில், 21,870 தேர்கள், 21,870 யானைகள், 65,610 குதிரைகள் மற்றும்109,350 காலாட்படையினர் இருந்தனர் என்று அறியலாம்.

அப்படியானால் 18 அக்ஷௌஹிணியில், 393,660 தேர்கள், 393,660 யானைகள், 1,180,980 குதிரைகள் மற்றும் 1,968,300 காலாட்படையினர் இருந்திருப்பார்கள். (இந்த எல்லா எண்களின் இலக்கங்களின் கூட்டுத் தொகை 18இன் கூட்டுத் தொகையான 9தான்!) 

யானை, குதிரை, தேர் மீது அமர்ந்து போரிட்ட வீரர்களைக்  கணக்கிட்டால், போரில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 39,36,600 (சுமார் 40 லட்சம்) வரும்.

பாண்டவர் பக்கத்தில் உயிர் பிழைத்த ஒரு சிலரைத் தவிர, மற்றவர் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர் என்பது ஒரு வருத்தமளிக்கும் உண்மை.

மகாபாரதத்தில் சுமார் 18 லட்சம் சொற்கள் உள்ளன. 

நல்லவேளை! இந்தக் கட்டுரையில் 18 பாராக்கள் இல்லை. 10 பாராக்கள்தான் உள்ளன. ஏதோ இந்த மட்டும் வாசகர்கள் பிழைத்தார்கள்!

அடுத்த பதிவு:
முந்தைய பதிவு: அறிமுகம்

1. அறிமுகம்

மகாபாரதம் ஒரு அற்புதமான காவியம் என்பதைப் பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் இருக்க முடியாது. 

இது போன்ற இதிகாசங்களும், புராணங்களும் பகுத்தறிவுக்கு முரணானவை என்று கருதுபவர்கள் கூட இந்தக் காப்பியத்தை இயற்றிய வியாசரின் கற்பனைத் திறனையும், கல்வியறிவையும், புலமையையும் வியக்காமல் இருக்க  முடியாது. 

மகாபாரதத்தை இயற்றிய வியாசர் இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக இடம் பெற்றிருப்பது இந்தக் காப்பியத்தின் ஒரு சிறப்பு. 

தமிழில் 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலைக் கவிதை வடிவில் எழுதிய சுந்தரம் பிள்ளை அதில் சுந்தர முனிவர் என்ற பாத்திரத்தை உலவ விட்டிருப்பது மகாபாரதத்தில் வியாசர் ஒரு கதாபாத்திரமாக வலம் வருவதை முன் வைத்துத்தான் என்று கருதலாம்.

மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று கருதப்படுகிறது. தமிழில் பாரதம் எழுதிய வில்லிபுத்தூர் ஆழ்வார் 'நீராழி உலகத்து மறை நான்கோடு ஐந்தாக' என்று துவங்கும் முதல் வரியிலே மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்று குறிப்பிடுகிறார். 

தேவர்கள் துலாபாரத்தின் ஒரு தட்டில் நான்கு வேதங்களையும், மறு தட்டில் மகாபாரதத்தையும் வைத்தபோது, அதிக எடையினால் மகாபாரதம் வைக்கப்பட்ட தட்டு கீழே இறங்கியதாம்.

வியாசர் இயற்றிய மகாபாரதம் 60 லட்சம் செய்யுட்களைக்  கொண்டது என்றும், அவற்றில் 30 லட்சம் செய்யுட்கள் தேவலோகத்திலும், 15 லட்சம் செய்யுட்கள் பித்ருலோகத்திலும், 14 லட்சம் செய்யுட்கள் யட்சர்கள், ராட்சசர்கள் ஆகியோர் வாழும் உலகங்களிலும் உள்ளன என்றும், 1 லட்சம் செய்யுட்களே இந்தப் பூவுலகில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

மகாபாரதக் கதையை வியாசர் சொல்ல, விநாயகர் அதை எழுதினர். தான் எழுதும் வேகத்துக்கு வியாசர் சொல்ல வேண்டும், இடையில் தடைப்படக் கூடாது என்று விநாயகர் நிபந்தனை போட, தான் சொல்லும் செய்யுட்களின் பொருளைப் புரிந்து கொண்ட பிறகே விநாயகர் எழுத வேண்டும் என்று வியாசர் பதில் நிபந்தனை போட்டார்.

விநாயகர் வேகமாக எழுதிக் கொண்டு வரும்போது, சில சமயம் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதபோது வியாசர் சில கடினமான செய்யுட்களைச் சொல்வார். அவற்றின் பொருளை விநாயகர் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், மேலே சொல்ல வேண்டிய செய்யுட்களை மனதில் உருவாக்கிக் கொள்வார் வியாசர். 

இவ்வாறாக இவ்வுலகின் முதல் நூல் பதிப்பு சிறப்பாக நடைபெற்றது!

நம் நாட்டின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதம் பற்றி நிறைய எழுதப்பட்டிருக்கிறது, சொல்லப்பட்டிருக்கிறது.

மகாபாரதம் ஒரு சமுத்திரம். எத்தனையோ பேர் அதில் இறங்கி எத்தனையோ முத்துக்களை எடுத்து வந்திருந்தாலும், எடுப்பதற்கு அதில் இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

என் போன்ற எளியவர்களால் புதிதாக முத்துக்கள் எதையும் எடுக்க முடியாது. ஏற்கெனவே பலர் வெளிக் கொணர்ந்த சில விஷயங்களைச் சற்று எளிமையாக எடுத்துச் சொல்துதல் மட்டும்தான் இயலும்.


அத்தகைய முயற்சிதான் இது.


மகாபாரதக் கதை வளைந்து நெளிந்து செல்லக் கூடிய ஒரு நீண்ட, நெடிய  கதை. ஆனால் அந்தக் கதைக்குள்ளேயே பல சுவையான கதைகள் உள்ளன. 

சில கதைகள் முக்கியக் கதைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். வேறு சில கதைகள் தனிக்கதைகளாக உள்ளன.

சில நீதிகளை விளக்கவோ அல்லது உதாரணங்களாகக் குறிப்பிடப்படவோ இந்தக் கதைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை தனித்தனியே படித்து ரசிக்கக் கூடியவை.


மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் பல்வேறு கதைகளை எளிமையாகச் சொல்வதுதான் இந்த வலைப்பதிவின் நோக்கம். 

ஏற்கெனவே இந்த மகாபாரதக் கதைகளை ஆங்கிலத்தில் இன்னொரு வலைப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன். 

அவற்றை இப்போது இந்தத் தளத்தில் தமிழில் வெளியிடும் நோக்கத்தில் இந்த வலைப்பதிவைத் துவக்கி இருக்கிறேன்.

மகாபாரதக் கதையை இன்னொரு வலைத்தளத்தில் (தமிழிலும், ஆங்கிலத்திலும்) எழுதி வருகிறேன். 

இந்தத் தளத்தில், மகாபாரதத்தில் வரும் பல்வேறு கதைகள் மட்டும் இடம் பெறும். 

மகாபாரதத்தின் முக்கியக் கதையில் வரும் சில சம்பவங்களையும் இதில் இடம்பெறச் செய்யும் எண்ணம் உண்டு. 

உதாரணமாக துரோணர்-துருபதன் கதை. இது மகாபாரதக் கதையின் ஒரு பகுதி என்றாலும், இதை ஒரு தனிக்கதையாகவும் படித்து மகிழலாம்.

மகாபாரதக் கதை இன்று நம் நாட்டில் பலருக்கு ஓரளவாவது தெரிந்திருக்கும். 

ஆனால் இங்கே நான் பதிவிடப் போகும் கதைகளில் பெரும்பாலானவை பலரும் அறியாத கதைகளாக இருக்கக் கூடும். அதனாலேயே இவை இன்னும் சுவையானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

முதல் கதையுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்

அடுத்த பதிவு:  மகாபாரதமும் எண் 18-உம்

2. மகாபாரதமும் எண் 18-உம்

மகாபாரதத்துக்கு ஜய என்று ஒரு பெயர் உண்டு. சம்ஸ்க்ருதத்தில் ஜய என்ற சொல்லுக்கு வெற்றி என்று பொருள். ஜய என்ற சம்ஸ்க்ருத எழுத்துக்கள் 18 என்ற ...